சமணப் பெண்கள் நோற்ற பாவை நோன்பு !

மார்கழி மாதம் என்றதும் பலரின் நினைவுக்கு வருவது “ஆண்டாள்” பாடிய திருப்பாவையும் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையும்…பண்டைய காலத்தில் இளம்பெண்கள் நல்ல கணவனை அடைய வேண்டி இந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து தம் தோழியருடன் அருகில் உள்ள நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி நோன்பு கடைபிடிப்பது வழக்கம் !

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாளும் இந்த நோன்பை கடைபிடித்து இறைவனை கணவனாய் அடைந்தாள் என்பது நம்பிக்கை…! அவள் பாடிய திருப்பாவை வேதம் அனைத்திற்கும் வித்தான கோலத்தமிழ் என்று போற்றப்படுகிறது..இது போலவே மாணிக்கவாசகரும் திருவண்ணமலையில் பெண்கள் சிவனை துதித்து நோற்ற நோன்பை “திருவெம்பாவை” என்ற நூலாய் பாடினார்.
இவ்விரண்டும் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே, ஆனால் அந்த காலத்தில் தமிழகத்தில் இருந்த தமிழ் சமணர்கள் (ஜெயின் என்பது இன்றைய வழக்கு) கூட இந்த நோன்பை கடைபிடித்துள்ளனர், அவிரோதி நாதர் என்னும் சமண கவிஞர் கிபி 12ஆம் நூற்றாண்டில் “சமணர் திருவெம்பாவை” எனும் நூலை செய்துள்ளார்..இதுவும் மற்ற இரண்டு நூட்களைப் போன்றே இனிமையானது, இன்றளவில் நமக்கு இந்த நூலில் இருந்து கிடைக்கப் பெறுவது 23 பாக்கள் மட்டுமே !

இதில் சமணப் பெண்கள் நோன்பைப் பற்றியும், அவர்கள் உரையாடல்கள், அவர்கள் ஒருவர் ஒருவரை துயில் எழுப்புவது, தீர்தங்கர்களை புகழ்வது, சமணர் நெறிகள் பற்றி அறியலாம் !
அதில் ஒரு அழகான பாடல்

கோபங் கடிந்துஎண் குணத்தானுக்கு அன்பாகிப்
பாபங்கள் நீங்கப் பணிந்தே இராப்பகலும்
சாபத் துணைவிழியாய்! தாதவிழ் பூவணைமேல்
சோபங்கள் வைத்தனையோ சொல்லாய் துடியிடையாய்
லோபத் தடமிதுவோ உம்பரெல்லாம் ஏத்தரிய
தூயமலர்ப் பொற்பாதந் துன்பமறத் தந்தருளும்
தீபங் குடியமர்ந்த செல்வன் சிறந்தபுகழ்
தாபந் தணிந்தோத வாரேலோர் எம்பாவாய்!

பாவை நோன்பு நோற்கும் பெண்களில் ஒரு பெண் முதல் பாட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை எழுப்பிக்கொண்டு இரண்டாவது வீட்டிற்கு செல்கின்றனர் அங்கும் ஒரு பெண் தூங்கிகொண்டிருக்க, அவளை மார்கழி நீராடலுக்கு எழுப்பும் பாட்டாக அமைந்துள்ளது…வெளியே நிற்கும் பெண் உள்ளே உறங்கும் பெண்ணை பார்த்து ” கோபத்தை வெறுத்து எட்டு குணங்களான அனந்த ஞானம், அனந்த வீரியம், அனந்த குணம், அனந்த தெரிசனம், நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, அவா இன்மை, அழியா இயல்பு இவைகளை கொண்டுள்ள அருகனுக்கு அன்பாகி இரவும் பகலும் அவனை வணங்கும் பெண்ணே ! இப்போது உன் ஆசையை இந்த பூவணை மேல் வைத்து உறங்கிகொண்டிருகிறாயே ! மெல்லிய இடையை உடையவளே..! தேவர்கள் ஏத்தவும் அறிய அருகன் தீபன்குடியில் கோயில் கொண்டுள்ள ஆதிநாதனை போற்றிப்பாட வாராய்” என்று அழைக்கின்றாள்

தமிழில் கிடைக்கபெறும் பல அறிய நூல்களில் இதுவும் ஒன்று, இது மறக்கபடாமல் இருக்க வேண்டும் !

from the land of Shervaroys "Salem", working in chennai for an IT MNC, interested in blogging, travelling, Tamil literature and music

Leave a Reply

%d bloggers like this: